மென்பொருட்கள் ஏன் உரிமையாளர்களைக் கொண்டிருத்தலாகாது

ஆசிரியர்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேன்

டிஜிட்டல் தகவல் தொழில்நுட்பம் தகவல்களை நகலெடுப்பதையும் மாற்றுவதையும் எளிமையாக்குவதன் மூலம் உலகிற்கு தம் பங்கினையாற்றுகிறது. கணினிகள் இதனை நம் அனைவருக்கும் எளிமையாக்க உறுதியளிக்கின்றன.

அனைவரும் இவை இப்படி எளிமையாக இருந்துவிட விரும்புவதில்லை. பதிப்புரிமை முறையானது மென்பொருள் நிரல்கட்கு “ சொந்தக் காரர்களைக் ” கொடுக்கிறது. இவர்களில் பெரும்பான்மையானோர் மென்பொருளின் ஆக்கப் பூர்வமான பயன் இதர மக்களுக்குச் சென்றடையா வண்ணம் தடை ஏற்படுத்தவே தீர்மானிக்கிறார்கள். இவர்கள் தாங்கள் மாத்திரமே நாம் பயன் படுத்தும் மென்பொருளை நகலெடுக்கவும் மாற்றவும் இயல வேண்டும் என ஆசைப் படுகிறார்கள்.

பதிப்புரிமைச் சட்டம் அச்சுத் துறையோடு வளர்ந்தது. இத் துறை மிகப் பெரிய அளவில் நகலுற்பத்தி செய்வதற்கான ஒரு தொழில்நுட்பமாகும். மிகப் பெரிய அளவில் நகலெடுப்போரைத் தடுப்பதால் இத்தொழில்நுட்பத்திற்குப் பதிப்புரிமை பொருந்துகிறது . வாசிப்போரின் சுதந்தரத்தை இது தடை செய்து விடவில்லை. அச்சகம் எதையும் நடத்த இயலாத சாதாரண வாசகர் புத்தகங்களை பேனா மையின் துணைக் கொண்டே நகலெடுக்க முடியும். இதற்காக சிலர் வழக்குகளை சந்திக்க நேர்ந்ததுமுண்டு.

அச்சுத் துறையையோடு ஒப்பிடுகையில் டிஜிட்டல் தொழில் நுட்பம் வளைந்துக் கொடுக்க வல்லது. தகவலானது டிஜிட்டல் வடிவத்தில் கிடைக்கும் பொழுது பிறரோடு பகிர்ந்துக் கொள்வது சுலபமாகிறது . வளைந்துக் கொடுக்கும் இத்தன்மையால் பதிப்புரிமைப் போன்றச் சட்டங்களுடன் இசைவது கடினமாகிறது. கொடுங்கோன்மையோடுக் கூடிய மட்டமான முறைகளைக் கையாண்டு மென்பொருளுக்கான பதிப்புரிமையை நிலைநாட்ட முயலும் முயற்சிகளுக்கு இதுவே காரணமாகிறது. . மென்பொருள் பதிப்புக் கூட்டமைப்பின் (மெ.ப.கூ) கீழ்காணும் நான்கு வழக்கங்களைக் கருத்தில் நிறுத்துங்கள்.

இந்நான்கு முறைகளும் முன்னாள் சோவியத் யூனியனில் நடைமுறையிலிருந்த பழக்கங்களை ஒத்திருக்கின்றன. அங்கே நகலெடுக்கும் ஒவ்வொரு கருவியும் தடைசெய்யப் பட்ட முறையில் நகலெடுப்பதை தடுக்கும் பொருட்டு காவலாளிகளைக் கொண்டிருக்கும். “ சமிசட் ” ஆக தகவலை நகலெடுத்து இரகசியமாக ஒவ்வொருவரும் கைமாற்ற வேண்டும். ஒரு சிறிய வேறுபாடுண்டு. சோவியத் யூனியனில் தகவல் கட்டுப்பாட்டின் நோக்கம் அரசியல். யு.எஸ் ஸில் இதன் நோக்கம் இலாபம். நோக்கங்களைக் காட்டிலும் செயல்களே நம்மைப் பாதிக்கின்றன. தகவல்களைப் பகிர்ந்துக் கொள்வதை தடுக்கும் எந்தவொரு முயற்சியும் ஒரேவிதமான முறைகளுக்கும் முரட்டுத் தன்மைகளுக்கும் இட்டுச் செல்கின்றன.

தகவல்களை நாம் எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்பதை தீர்மானிக்கும் அதிகாரம் தங்களுக்கு தரப்பட வேண்டும் என உரிமையாளர்கள் பலக் காரணங்களை முன்வைக்கிறாரகள்:

சமூகத்தின் தேவைதான் என்ன? தமது குடிமக்களுக்கு உண்மையாகவே கிடைக்கக் கூடியத் தகவல்கள் வேண்டும். உதாரணத்திற்கு இயக்க மட்டுமல்லாது கற்க, வழுநீக்க, ஏற்று மேம்படுத்த வல்ல நிரல்கள் தேவை. ஆனால் மென்பொருட்களின் உரிமையாளர்கள் தருவதென்னவோ நம்மால் கற்கவும் மாற்றவும் இயலாத ஒரு கருப்புப் பெட்டி.

சமூகத்திற்கு விடுதலையும் தேவைப் படுகிறது. நிரலொன்றுக்கு உரிமையாளரிருந்தால் பயனர்கள் தங்கள் வாழ்வின் ஒரு பகுதியைத் தாங்களே கட்டுப் படுத்தும் விடுதலையை இழக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் மேலாக சமூகமானது தமது குடிகளிடையே பரஸ்பரம் ஒத்துழைத்து வாழக் கூடிய சிந்தனை வளர ஊக்குவிக்க வேண்டும். மென்பொருளின் உரிமையாளர்கள் இயற்கையாக நாம் நமது சுற்றத்தாருக்கு உதவுவதை “போலித்தனம்” எனப் பகன்றால் அது நமது சமூகத்தின் குடிமை இயல்பையேக் களங்கப் படுத்துவதாகும்.

ஆகையால் தான் நாங்கள் கட்டற்ற மென்பொருள் என்பது விலையினை அடிப்படையாகக் கொள்ளாது விடுதலையை அடிப்படையாகக் கொண்டது என்கிறோம்.

உரிமையாளர்களின் பொருளாதாரக் கூற்று வழுவுடையது ஆனால் பொருளாதார பிரச்சனை என்னவோ உண்மைதான். சிலர் மென்பொருள் இயற்றுவதை சுகமாகக் கருதுவதன் காரணமாகவோ அல்லது அதன் மீதுள்ள ஈடுபாடு மற்றும் விருப்பத்தின் காரணமாகவோ மென்பொருள் இயற்றுகிறார்கள். ஆனால் மென்மேலும் மென்பொருட்கள் வளர வேண்டுமாயின் நாம் நிதிகள் திரட்ட வேண்டும்.

பத்து ஆண்டுகளாக , கட்டற்ற மென்பொருட்களை உருவாக்குவோர் நிதி திரட்டுவதற்கான பல்வேறு முறைகளைக் கையாண்டு சில வெற்றியும் பெற்றுள்ளார்கள். யாரையும் பணக்காரர்களாக்கும் அவசியம் எதுவும் இல்லை. ஒரு சராசரி யு.எஸ் குடும்பத்தின் வருமானம் சுமார் 35 ஆயிரம் டாலர். இதுவே நிரலெழுதுவதைவிட குறைந்த திருப்தி அளிக்கக் கூடிய பெரும்பாலான பணிகளுக்கு போதுமான ஊக்கத் தொகையாக நிரூபணமாகியுள்ளது.

பரிவுத் தொகை அவசியமற்றதாக்கிய வரையில், பல வருடங்களுக்கு , நான் இயற்றிய கட்டற்ற மென்பொருளை மேம்படுத்தியதால் கிடைத்த வருவாயைக் கொண்டே வாழ்ந்து வந்தேன். ஒவ்வொரு மேம்பாடும் நிலையான வெளியீட்டோடு சேர்க்கப் பட்டமையால் இறுதியில் பொதுமக்களுக்கும் கிடைக்கக் கூடியதாக அமைந்தது. இல்லையெனில் முக்கியம் வாய்ந்ததாக எமக்குத் தோன்றிய மாற்றங்களை செய்யாது, நுகர்வோர் விரும்பிய மேம்பாடுகளை நிறைவேற்றியமைக்காக எமக்கு நிதியளித்தார்கள்.

ஆதரவுப் பணிகளை மேற்கொள்வதன் மூலமாக கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்கும் சிலர் சம்பாதிக்கின்றனர். (இக்கட்டுரை எழுதப் பட்ட போது) ஏறத்தாழ ஐம்பது பணியாளர்களைக் கொண்ட சைக்னஸ் சப்போர்ட், தமது பணியாளர்களின் 15% பணிகள் கட்டற்ற மென்பொருட்கள் உருவாக்குவது எனக் கணக்கிடுகிறது. இது மென்பொருள் நிறுவனமொன்றில் மதிக்கத் தக்க பங்காகும்.

இன்டல், மோடோரோலா, டெக்ஸாஸ் இன்ஸ்ட்ருமென்ட்ஸ் மற்றும் அனலாக் டிவைசஸ் போன்ற நிறுவனங்களும் சி நிரலாக்கத்திற்கான குனு ஒடுக்கியின் தொடர்ச்சியான உருவாக்கத்திற்கு நிதியளிக்க ஒன்றிணைந்துள்ளார்கள். அதே சமயம் அடா மொழியின் குனு ஒடுக்கிக்கு யு.எஸ் விமானப் படை நிதியளிக்கிறது. அதிக தரமுடைய நிதி சேமிக்கக் கூடிய ஒடுக்கியை உருவாக்க இதுவே உகந்த முறையென்று அது கருதுகிறது. [சில காலங்களுக்கு முன்னர் வீமானப் படையின் நிதியளிப்பு நிறைவடைந்தது. தற்போது குனு அடா ஒடுக்கி பயன்பாட்டிலுள்ளது. அதன் பராமரிப்புக்கான நிதி வணிக ரீதியில் சேர்க்கப் படுகின்றது.]

இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலான உதாரணங்களே. கட்டற்ற மென்பொருளியக்கம் இன்னும் சிறிய அளவிலேயே இளமையுடன் இருக்கின்றது. இந்நாட்டில் (யு.எஸ்) கேட்போருடன் கூடிய வானொலியின் எடுத்துக் காட்டானது பயனர்களைக் கட்டாயப் படுத்தி பணம் வசூலிக்காது இன்னும் பலச் செயலை ஆதரிக்க இயலும் எனவும் காட்டுகிறது.

கணினியினைப் பயன்படுத்தும் ஒருவராக தாங்கள் ஒரு தனியுரிம மென்பொருளைப் பயன்படுத்தலாம். தங்களின் நண்பரொருவர் நகலொன்றை கேட்டால் முடியாது என மறுப்பது தவறாகிவிடும். பதிப்புரிமையினைக் காட்டிலும் ஒத்துழைப்பு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. திரை மறைவான நெருக்கமான ஒத்துழைப்பென்பது நல்லதொரு சமூகத்திற்கு வித்திடாது. தனி நபரொருவர் நேர்மையானதொரு வாழ்வினை பொதுப்படையாக பெருமையுடன் மேற்கொள்ள விழைய வேண்டும். இதன் அர்த்தம் யாதெனின் தனியுரிம மென்பொருட்களை “வேண்டாம்” என்று சொல்வதே.

மென்பொருளைப் பயன்படுத்தும் ஏனைய பயனர்களுடன் திறந்த மனதோடும் விடுதலையுணர்வோடும் ஒத்துழைக்கத் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் பணி செய்யும் முறையினைக் கற்கும் ஆற்றல் கொள்ளவும், தங்களின் மாணாக்கருக்கு கற்று கொடுக்கவும் தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள். மென்பொருள் பழுதாகும் போது தாங்கள் விரும்பும் நிரலாளரைக் கொண்டு அதனை சரி செய்ய தாங்கள் உரிமைக் கொண்டுள்ளீர்கள்.

கட்டற்ற மென்பொருள் தங்களின் உரிமை.


கட்டற்ற மென்பொருள் விடுபெற்ற சமூகம்: ரிச்சர்ட் எம். ஸ்டால்மேனின் தேர்வு செய்யப் பட்ட கட்டுரைகள் ஆவணத்தில் இக்கட்டுரை பதிப்பிக்கப் பட்டுள்ளது.